எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடமாமே..?
ஆமாம். கடந்த மார்ச் மாதம் வரையிலான தமிழகத்தின் கடன் தொகை 7,53,860 கோடி. இரண்டாமிடத்தில் இருக்கும் உத்தரபிரதேசத்தின் கடன் தொகை 7,10,000 கோடி. இந்தியாவின் கடன் தொகை 172 லட்சம் கோடி. அமெரிக்காவின் கடன் தொகை 2,624 லட்சம் கோடி. இதுமட்டுமல்ல பணக்கார நாடுகளான இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், சீனா அனைத்துமே அதிக கடன் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் கடன் விகிதம் 27.7 சதவிகிதம். இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் இந்தியக் கடன் விகிதத்தை விடவும் குறைவானதுதான். தமிழகத்தைவிடக் கூடுதலாக கடன்விகிதம் உள்ள மாநிலங்களாக ஆந்திர, கேரள மாநிலங்கள் திகழ்கின்றன. மாநிலங்களின் கடன் வரம்புக்கு ஒரு உச்சவரம்பு நிர்ண யிக்கப்பட்டிருக்கும். அதைத்தாண்டி வாங்க முடியாது. அந்த வகையில் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால் கடன்- வட்டி எனும் நெருக்கடியிலிருந்து மீள்வது இந்தியா, தமிழகம் இரண்டுக்குமே நல்லது. வரவு எட்டணா- செலவு பத்தணா நிர்வாகம் யாருக்குமே ஆபத்துதான்.
தே.மாதவன், கோயமுத்தூர்-45
தோல்வி என்று தெரிந்தும் மத்திய அரசு மீது ஏன் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகின்றன?
இதோ நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் அல்லவா! இதுபோல மக்களின் கவனத்துக்குக் கொண்டுவரத்தான். ஒரு மாநிலமே 3 மாதமாகச் சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது. கலைநிகழ்ச்சிகள் நடத்தவா? இதுபோன்ற விஷயங்களை விவாதிக்கத்தானே. நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று பதிலளித்தால் பிரதமராக மோடியின் மதிப்பு உயரத்தானே செய்யுமே தவிர சரிந்துவிடாது.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
அமலாக்கத் துறை இயக்குநர் பதவிக்கு வேறு தகுதியான நபர்களே இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்விகேட்டு குட்டு வைத்திருப்பது பற்றி?
திறமையான, தங்கள் கைக்கு அடக்க மான நபர்களை கொஞ்சகாலம் பதவி நீட்டிப்புச் செய்வது வழக்கமானதுதான். ஆனால் எஸ்.கே. மிஸ்ரா விவகாரத்தில் ஏற்கெனவே மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. நான்காவது முறை வழங்கும்போது எதிர்க் கட்சிகள் வழக்குத் தொடர்ந்துள்ளதால் உச்சநீதிமன்றம் சூடான கேள்விகளை எழுப்பியுள்ளது. இருந்தாலும், ஒன்றிய அரசு வெட்கமில்லாமல் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு கேட்கிறது.
பி.கேசவன், வேலூர்
"2024 தேர்தலில் தோற்றாலும் பா.ஜ.க. நாட்டில் பாய்ச்சிய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும்'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகர் சொன்னது ஏன்?
மோடியின் இந்த பத்தாண்டு கால ஆட்சி யில், ஆர்.எஸ்.எஸ். பதவியில் மட்டும்தான் அமரவில்லை. மற்றபடி அரசு அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உத்தரவு போட்டு மறைமுகமாக அதுதான் ஆட்சிசெய்துள்ளது. ஹரியானா போன்ற மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளில் நேரடியாக சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். ஆட்களே அமர்ந்து ஏகப்பட்ட களேபரங்களை பண்ணி வைத்திருக்கிறார்கள். வடமாநிலங்களில் ஒருவர் தவறு செய்தால் நேரடியாக பொக்லைனை அனுப்பி வீடுகளை இடிக்கிறார்களே… அது அரசிய லமைப்புச் சட்டத்தில் உள்ளதுதானா?… நீதிபதிகளை மீறி சட்டத்தைக் கையிலெடுக்கும் இந்தப் போக்கு முன்பு நடைமுறையில் இருந்ததுதானா? இதையெல்லாம் மனதில் கொண்டுதான் அவர் அப்படிப் பேசியுள்ளார்.
அன்னூரார், பொன்விழி
வாழ்வில் எந்த பிரதிபலனும் இல்லாமல் ஏமாந்து வாழ்வது தொண்டனா... ரசிகனா...?
கிட்டத்தட்ட இந்த இருவருமே ஏமாந்து வாழும் வகைப்பாட்டினர்தான். இதில் தொண்டன் விழித்துக்கொண்டு சரியான வகையில் செயலாற்றி னால் மெல்ல மெல்ல அரசியலில் உயர் பதவிக்கு வந்துவிடலாம். ரசிகன் இன்னும் பாவப்பட்ட ஜென்மம், ஒவ்வொரு படத்துக்கும் கட்அவுட், பாலாபிஷேகம், டிக்கெட் வாங்கியே அழியவேண்டியதுதான் அவன் தலைவிதி. ஒருவேளை சம்பந்தப்பட்ட நடிகர் கட்சி தொடங்கி, பெரிய பொறுப்புக்கு ரசிகன் வந்தால் அவன் நிலைமை மாறலாம்.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
"நாட்டின் வளர்ச்சிக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்' என்கிறாரே ஆளுநர் ரவி?
முதலில் அவரது ஆளுநர் பொறுப்புகளை சரியாகச் செய்யட்டும். ஆளுநர் பாதி… அரசியல் வாதி பாதி ஸ்டைலால் இங்கே ஏற்கெனவே நிறைய விஷயங்கள் குழம்பிக் கிடக்கின்றன.